விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
ஊரடங்கினால் ரெயில் போக்குவரத்து குறைந்த நிலையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே விழுப்புரத்தில் இருந்து தாம்பரம், புதுச்சேரி, காட்பாடி, மயிலாடுதுறை, மேல்மருவத்தூர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய ரெயில் நிலையம்
தற்போது கன்னியாகுமரி, செந்தூர், முத்துநகர், அனந்தபுரி, கம்பன், நெல்லை, மன்னை, உழவன், பாண்டியன், குருவாயூர் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களிலும் கொரோனா அச்சம் காரணமாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதனால் ரெயில் பெட்டிகளில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. இதனால் 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கிய விழுப்புரம் ரெயில் நிலையம் தற்போது பயணிகள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.
பராமரிப்பு பணி
பெரும்பாலான ரெயில்களின் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதை பயன்படுத்தி விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் தற்போது ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய ஜல்லிக்கற்கள், மண் ஆகியவற்றை அகற்றிவிட்டு புதியதாக ஜல்லிக்கற்கள், மண் ஆகியவற்றை கொட்டி தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விழுப்புரம்- புதுச்சேரி, விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை இடையேயுள்ள ரெயில்வே பாதைகளில் உயரழுத்த மின் கம்பிகளில் சிறு, சிறு பழுதுகள் இருப்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் பணியில் எலக்ட்ரிக்கல் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் மிகுந்த கவனமுடன் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் இவர்கள் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் முக கவசம் அணிந்துகொண்டும், அவ்வப்போது கிருமி நாசினி திரவத்தை பயன்படுத்தியும் பாதுகாப்பான முறையில் பணி செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story