குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இரணியலில் 28 செ.மீ. மழை பதிவானது. 2 ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இரணியலில் 28 செ.மீ. மழை பதிவானது. 2 ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது.
கொட்டித் தீர்த்த மழை
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாகவும், எனவே அதன் காரணமாக குமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அதோடு இரவிலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரணியல் பகுதியில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. அங்கு ஒரே நாளில் உச்சபச்சமாக 28 செ.மீ. மழை பதிவானது.
தொடர்ந்து மழை பெய்ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் தடுப்பணைக்கு மேல் வெள்ளம் சீறி பாய்வதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முல்லையாற்றில் உடைப்பு
இந்த மழையால் பல்லிக்கூட்டம் பகுதியில் இருந்து வரும் முல்லையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் முல்லையாற்றில் திக்குறிச்சி பகுதியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் வந்த மழை தண்ணீர் அருகில் உள்ள வாழை தோட்டம் மற்றும் பயிர்களுக்குள் புகுந்தது.
இதனால் திக்குறிச்சி, சிதறால் பகுதிகளில் வயல்களில் ஆற்றுநீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் மற்றும் நெல் பயிர்கள், காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கின.
இதனால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மழை இப்படியே தொடர்ந்தால் தங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்றும், உடனடியாக ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேங்காப்பட்டணம் அருகே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியான பரக்காணியில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் 130 அடி அகலத்தில் சென்ற தாமிரபரணி ஆற்று நீர் செல்ல 30 அடி இடைவெளி மட்டுமே விட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, தடுப்பணை பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. தடுப்பணை கட்டுவதற்காக பொதுப்பணித்துறையினர் பரக்காணி பகுதியில் மணல் மேடுகள் அமைத்து உள்ளனர்.
தென்னை மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன
இந்தநிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் கடலில் கலக்க முடியாததால், வைக்கல்லூர் பகுதியில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஆற்று வெள்ளம் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் பாய்ந்தது.
விளைநிலத்தில் நின்ற தென்னை மரங்கள் வேரோடு அடித்து செல்லப்பட்டன. வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நாசமாகியதுடன் ஆற்று வெள்ளத்தில் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், உடைப்பு ஏற்பட்டு ஆற்று தண்ணீர் மரங்களை அடித்துச் சென்ற பகுதியில் தான் மீனவர்கள் தங்களது வள்ளத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆற்று தண்ணீர் வடிந்தால் மட்டுமே வள்ளங்கள் உள்ளதா? அல்லது கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதா என்பது தெரியவரும்.
கலெக்டர் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பரக்காணி பகுதிக்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றி ஆற்று நீர் வழிந்தோட வழி செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் மணல் மேடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story