வீடு தீப்பிடித்து எரிந்தது; தேக்கு பொருட்கள் நாசம்


வீடு தீப்பிடித்து எரிந்தது; தேக்கு பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 15 May 2021 12:02 AM IST (Updated: 15 May 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பூர்வீக வீடு தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த ஏராளமான தேக்கு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

காரைக்குடி,

காரைக்குடி அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பூர்வீக வீடு தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த ஏராளமான தேக்கு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

 தீ விபத்து

காரைக்குடி அருகே உள்ளது புதுவயல். இங்குள்ள ராமன் செட்டியார் வீதியில் ராமன் செட்டியாருக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் நிலப்பரப்பில் படைப்பு வீடு என்று அழைக்கப்படும் பிரமாண்ட வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு முழுவதும் பர்மா தேக்கால் செய்யப்பட்ட நிலை, கதவு, தூண்கள் என அழகிய வேலைப்பாடு கொண்டது.
மேலும் அந்த பகுதி மக்கள் இந்த வீட்டை சுபகாரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மண்டபமாகவும் பயன்படுத்தி வந்தனர். இது தவிர இந்த வீட்டில் சுபகாரியங்களுக்கு வாடகைக்கு விடப்படும் சேர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள தேவகோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி, திருமயம் ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 பொருட்கள் சேதம்

இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த பர்மா நிலை, கதவு, ஜன்னல், பீரோ, தூண்கள் உள்ளிட்ட பொருட்களும், அங்கிருந்த வாடகை சமையல் பாத்திரங்கள், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. அவற்றின் மதிப்பு தெரியவில்லை.
 தீ விபத்து நடத்த வீட்டில் ஆட்கள் யாரும் தங்காததாலும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு இந்த வீட்டை யாருக்கும் கொடுக்காததாலும் பெரும் உயிரிழப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story