முழுஊரடங்கு கட்டுப்பாடு: காவல்கிணறு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்


முழுஊரடங்கு கட்டுப்பாடு: காவல்கிணறு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்
x
தினத்தந்தி 15 May 2021 1:14 AM IST (Updated: 15 May 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

முழுஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக காவல்கிணறு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பணகுடி:
காவல்கிணறு சந்திப்பில் காமராஜர் காய்கனி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த நிலையில் கொரோனா பரவலையொட்டி முழு ஊரங்கு கட்டுப்பாடாக மதியம் 12 மணி வரை மட்டுமே மார்க்கெட் செயல்பட அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடிவது இல்லை. அதற்குள் ஏலம் முடிவடைந்து விடுகிறது. மேலும் காய்கறிகள் சில்லரை விற்பனைக்கும் தடை உள்ளதால் வியாபாரிகள் வரத்து குறைந்து விட்டது. 

இதுபோன்ற காரணங்களால் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து விடுகிறது. மேலும் காய்கறிகளின் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. வெண்டை, தக்காளி, பூசணி, மிளகாய், மாங்காய், முருங்கை, சீனிஅவரை, சுரைக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்து நாடார், செயலாளர் மாம்பழ சுயம்பு ஆகியோர் கூறுகையில், குறுகிய நேரத்தில் ஏலம் முடிவடைந்து விடுவதால் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படும். 
மேலும் எங்களாலும் மார்க்கெட் நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மார்க்கெட்  இயங்கும் நேரத்தை அதிகரிக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Next Story