வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 May 2021 7:52 PM GMT (Updated: 14 May 2021 7:52 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்:
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு (தேர்ச்சி பெறாதவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள்), 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் ஆகியோர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். 31.3.2021 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருக்கக்கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்றுகொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்விச்சான்றுகள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் மேற்படி சான்றுகளுடனும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று மூன்றாண்டு முடிவுற்ற பொதுப்பிரிவினரும், பத்தாண்டுகள் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும், ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story