ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 14 May 2021 7:52 PM GMT (Updated: 14 May 2021 7:52 PM GMT)

ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையை, ஊரடங்கினால் தங்களது வீடுகளிலேயே நடத்தினர்.

பெரம்பலூர்:

ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளிவாசல்களும் மூடப்பட்டன. இதையடுத்து ரமலான் மாதத்தையொட்டி நோன்பு இருந்த, முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே நோன்பு திறந்தனர்.
கொண்டாட்டம்
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவினால் பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிவாசல்கள், திறந்த வெளி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. இதனால் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளிலும், வீட்டின் மொட்டை மாடியிலும் சிறப்பு தொழுகையை நடத்தினர்.
பெரம்பலூரில் ஆண்டுதோறும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் ஊரடங்கு உத்தரவினால் அந்த பகுதியில் தொழுகை நடத்தப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
வீடுகளில் சிறப்பு தொழுகை
வீடுகளில் காலை 6.30 மணிக்கு நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சில இடங்களில் பக்கத்து வீடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் கைகொடுத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள், ஏழைகளுக்கு ஈகை செய்தும் மகிழ்ந்தனர்.
மங்களமேடு
இதேபோல் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் முஸ்லிம்கள், தங்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஏழை மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவு வழங்கினர். சில இடங்களில் ஜமாத் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் ரஞ்சன்குடிக்காடு, தேவையூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களும் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் தொழுகை நடத்தினார்கள்.

Next Story