முக கவசம் அணியாத 228 பேருக்கு ரூ.55,600 அபராதம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற 228 பேரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற 228 பேரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
வாகன சோதனை
தமிழக அரசு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
அப்போது முக கவசம் அணியாத 50 பேரிடம் இருந்து தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட மளிகை கடை ஒன்றுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
நேற்று சென்னிமலையில் வாரச்சந்தை கூடியது. சந்தைக்கு குறைவான அளவிலேயே பொதுமக்கள் வந்தனர். இதைெயாட்டி சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
ஈரோடு மாவட்ட எல்லையான புஞ்சைபுளியம்பட்டி டானா புதூர் போலீஸ் சோதனை சாவடியில் புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் விதித்தனர். 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காரில் செல்பவர்களிடம் உரிய தேவைக்காக செல்கிறீர்களா? என்று விசாரித்தனர்.
கோபி
கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு உத்தரவின் பேரில் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர், வரப்பாளையம், நம்பியூர், கடத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்கள் பிடிபட்டனர். இதுதொடர்பாக மொத்தம் 108 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் என மொத்தம் ரூ.21 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, பெருந்துறை நகரில் தேவையில்லாமல் ரோடுகளில் சுற்றித்திரிந்த 80 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்த 20 பேருக்கு, தலா ரூ.200 வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி நால்ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொேரானா விதிமுறைகளை மீறிய 228 பேருக்கு ரூ.55 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story