நாமக்கல் மாவட்டத்தில் 15 குழந்தைகள் உள்பட 560 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் 15 குழந்தைகள் உள்பட 560 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. மேலும் 2 மூதாட்டிகள் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
நாமக்கல்:
கொரோனா பாதிப்பு
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 20,386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,387 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 15 குழந்தைகள் உள்பட 560 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,947 ஆக உயர்ந்தது. இதில் 10 குழந்தைகள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நேற்று 339 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
4 பேர் பலி
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 149 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 மூதாட்டிகள் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்தது.
மேலும் இதுவரை 18,339 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 2,455 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகள் பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்களே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் புதிய உச்சமாக 457 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று மேலும் அதிகரித்து, நாமக்கல் மாவட்டம் இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 15 பேர் குழந்தைகள் என்பது பொதுமக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நாளுக்கு நாள் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story