சாலைகளில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை


சாலைகளில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 May 2021 2:21 AM IST (Updated: 15 May 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சாலைகளில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

தஞ்சாவூர்;
அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சாலைகளில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
முழு ஊரடங்கு மீறல் 
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பால் விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் சாலையில் சுற்றி திரிவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படி தேவையின்றி சுற்றி திரிபவர்களிடம் போலீசார் கெடுபிடி செய்யாததால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறதா? என கேள்வி கேட்கும் அளவுக்கு முழு ஊரடங்கை மீறி சகஜமாக மக்கள் சாலைகளில் வலம் வருகின்றனர்.
போலீசார் அறிவுறுத்தல் 
தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு போலவே இல்லாமல் எப்போதும் இருக்கும் நாட்களை போல் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல், கடைகளில் கூட்டம் என இருந்தன. அதிலும் மக்கள் முக கவசம் சரியாக அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றி திரிகின்றனர். இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி தேவையின்றி வெளியில் வாகனங்களில் வருவோர், நடமாடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசின் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.
விசாரணை 
இதன்காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தஞ்சை மாநகரில் காந்திஜிசாலை, கீழவாசல், தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி, மேலவீதி, மருத்துவக்கல்லூரி சாலை, புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் ஏராளமானோர் வலம் வந்தனர்.
தஞ்சை அண்ணாசிலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனங்களிலும், கார்கள், ஆட்டோக்களில் வந்தவர்களை எல்லாம் வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் பலர், வேலைக்கு சென்று வருவதாகவும், மருந்துக்கடைகள், மருத்துவமனைகளுக்கு செல்வதாக தெரிவித்தனர். அவர்களிடம் அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் உள்ளிட்டவை இருக்கிறதா? என பார்த்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
எச்சரிக்கை 
உரிய சான்றிதழ், அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்களிடம் மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இப்படி சுற்றி திரிந்தால் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்? என போலீசார் அறிவுரை வழங்கியதுடன் இனிமேல் இதுபோன்று அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தடை செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, தேவையின்றி வாகனங்களில் 3 பேர் வந்தால் அபராதம் விதிக்கவும், 4 பேர் வந்தால் வழக்குப்பதிவும் செய்யப்படும். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன் எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். ரம்ஜான் பண்டிகை என்பதால் கெடுபிடி எதுவும் இல்லை. நாளை(அதாவது இன்று) முதல் தேவையின்றி சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story