மூடிக்கிடக்கும் ஆக்சிஜன் ஆலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்சிஜன் ஆலைகளை மீண்டும் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
நெல்லை:
தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் நேற்று 2-வது நாளாக கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அருகே உள்ள காந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து அதே பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆலையில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள், தொழில்நுட்ப பிரச்சினைகளை சரிசெய்ய அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்து, ஆலையை விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் அங்கு ரூர்கேலாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜனை அங்குள்ள சிலிண்டர்கள் மூலம் நிரப்பி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்காமல் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். தற்போதுள்ள ஆக்சிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஆலையை இயக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆலையை இயக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்து கொடுப்பதாக அதன் உரிமையாளரிடம் தெரிவித்து உள்ளோம்.
இந்த ஆலை 2.5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்காமல் உள்ளது. அதனை உடனடியாக இயக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியான நெல்லை உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தியை பொறுப்பு அதிகாரியாக நியமித்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மிக விரைவில் இந்த ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும். இதேபோல் தமிழகம் முழுவதும் இயங்காமல் இருக்கும் ஆக்சிஜன் ஆலைகளை மீண்டும் திறந்து செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story