சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 800 பேர் மீது வழக்கு ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில் சேலம் மாநகரில் 16 இடங்களிலும், புறநகர் பகுதியில் 20 இடங்களிலும் என மொத்தம் 36 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று மதியம் 12 மணிக்கு மேல் சேலம் மாநகரில் முக்கிய சாலைகளை தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாதது, ஹெல்மெட் போடாமல் வந்தவர்கள் மற்றும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தவர்கள் என 3 வகைகளாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
800 பேர் மீது வழக்கு
சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரிலும், புறநகர் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரிலும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று ஒரே நாளில் சேலம் மாநகரில் 450 வாகன ஓட்டிகள் மீதும், புறநகர் பகுதியில் 350 வாகன ஓட்டிகள் மீதும் என மொத்தம் 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.100-ம், முக கவசம் அணியாமல் வந்ததற்காக ரூ.200-ம், மதியம் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு மீறி வெளியே வந்ததற்காக ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால் காலை 10 மணிக்கு மேல் சாலையில் சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story