கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆக்சிஜன் பஸ்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் ஆக்சிஜன் பெற ஆக்சிஜன் பஸ்சை தனியார் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் ஆக்சிஜன் பெற ஆக்சிஜன் பஸ்சை தனியார் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆக்சிஜன் படுக்கைகள்
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள கொரோனா படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தை பொறுத்தவரை 10 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 34 என மாவட்டம் முழுவதும் 44 மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 155 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து மேலும் கூடுதலாக 45 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருந்து வருவதால் ஒரு சிலருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
பஸ் ஏற்பாடு
ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பலரும் அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்சுகளில் காத்திருக்கிறார்கள். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் பலியாகினர். இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வருகிறவர்கள் காத்திருக்கும் போது, அவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி நர்சிங் ஹோம், மெஜஸ்டிக் நிறுவனம், யங் இந்தியன்ஸ், சிவா நிகேதன் பள்ளி, திருப்பூர் ரைடர்ஸ் கிளப் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் ஆக்சிஜன் பஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பஸ் நேற்று திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவிடப்பட்டது. இதனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.
இந்த ஆக்சிஜன் பஸ் குறித்து அவர்கள் கூறியதாவது
கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது ஆக்சிஜன் இல்லாமல் இறப்பதை தவிர்க்கும் வகையில் இந்த ஆக்சிஜன் பஸ்சை ஏற்பாடு செய்துள்ளோம். 24 மணி நேரமும் இதில் ஆக்சிஜன் கிடைக்கும். 6 கொரோனா நோயாளிகள் இதன் மூலம் பயன்பெற முடியும். ஒரு நோயாளிக்கு 10 லிட்டர் சிலிண்டர் வீதம் 6 பேருக்கு 60 லிட்டர் ஆக்சிஜன் கிடைக்கும். இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த எந்திரத்தின் மூலம் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக
அதாவது ஆக்சிஜன் கான்சென்டிரேடர் மூலம் சராசரியாக கிடைக்கும் காற்று இந்த எந்திரத்தின் மூலம், சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆக்சிஜனாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் முறையாக இந்த ஆக்சிஜன் பஸ் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எந்திரம் பழுதாகாமல் மற்றும் நோயாளிகளுக்கு சிரமம் இன்றி ஆக்சிஜன் கிடைக்கிறதா? என 2 நாட்கள் பார்க்கப்படும்.
இதன் பின்னர் இந்த எந்திரம் சரியாக பயன்பாட்டில் இருந்தால், கூடுதலாக ஆக்சிஜன் பஸ்கள் தயார் செய்யப்படும். மேலும் கூடுதலாக 15 கொரோனா படுக்கைகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்க உள்ளோம். இதன் மூலம் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story