கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க 300 பயிற்சி டாக்டர்கள்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க 300 பயிற்சி டாக்டர்கள்
x
தினத்தந்தி 15 May 2021 8:04 AM IST (Updated: 15 May 2021 8:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்க 300 பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இன்று முதல் பணியை தொடங்குகிறார்கள்.

சென்னை, 

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க 300 பயிற்சி டாக்டர்களை சென்னை மாநகராட்சி நியமித்து இருக்கிறது. இந்த பயிற்சி டாக்டர்கள், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் இன்று (சனிக்கிழமை) முதல் பணியை தொடங்க இருக்கின்றனர்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் அதனை முறையாக எடுத்து கொள்கிறார்களா?, வேறு எதுவும் அறிகுறி இருக்கிறதா?, மேல் சிகிச்சை எதுவும் தேவைப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் இந்த பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் பயிற்சி டாக்டர்களுக்கு, சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகை கூட்டரங்களில் நேற்று நடந்தது. இதில் துணை கமிஷனர்கள் ஆல்பிஜான்வர்கீஷ், ராஜகோபால் சுங்கரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

ஒவ்வொரு கொரோனா நோயாளிகளும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு தான் இந்த பயிற்சி டாக்டர்களை நியமித்து இருக்கிறோம்.

அவர்கள் நாளை (இன்று) முதல் காலை 8 மணி முதல் 3 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என 2 ‘ஷிப்டு’களில் பணியாற்றுவார்கள். இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஒரு நாளைக்கு ஒரு முறை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிப்பார்கள்.

இந்த பயிற்சி டாக்டர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் என்ற வகையில் 3 மாதத்துக்கு தற்காலிகமாக நியமித்துள்ளோம். தற்போது சென்னையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story