தேனியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்
தேனியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
தேனி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் உலா வருவதை பார்க்க முடிகிறது. இந்தநிலையில், நேற்று தேனி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் உலா வந்தவர்களுக்கு போலீசார் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
இதற்காக நேரு சிலை சிக்னலில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களை சாலையோரம் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். சுமார் அரை மணி நேரம் அங்கேயே நிற்க வைத்து கொரோனா நோய் பரவல் ஏற்படுத்தும் தாக்கம், அதனால் முன்கள பணியாளர்கள் அனுபவிக்கும் சிரமங்களை எடுத்துக்கூறினர். பின்னர், ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு நூதன முறையில் தண்டனை அளிக்கும் வகையில் அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
அதன்படி அவர்கள், "இனிமேல் ஊரடங்கு உத்தரவை மதிப்பேன். ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்ற மாட்டேன். போலீசார் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story