நாகையில், காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு


நாகையில், காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 15 May 2021 9:37 PM IST (Updated: 15 May 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக நாகையில், நேற்று காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. முன்னதாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

 நாகப்பட்டினம்:
ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக நாகையில்,  நேற்று காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. முன்னதாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்குநாள் உச்சம் தொட்டு வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த  கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் மளிகை, காய்கறி, இறைச்சி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளையும் திறக்க அனுமதியில்லை. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளும் மதியம் 12 மணிக்கு மேல் அடைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. 
புதிய கட்டுப்பாடுகள்
இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு வெளியிட்டது. 
 இதில் டீக்கடைகள் மற்றும் பூ, பழம் மற்றும் தரைக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில்  தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
கூட்டம் அலை மோதியது
அதன்படி நாகை மாவட்டத்தில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருக்கும் என்பதாலும், இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதாலும் நேற்று வீட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். இதனால் நாகைக்கடைத்தெருவில் கூட்டம் அலைமோதியது. 
இதேபோல் மாவட்டம் முழுவது கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் சமூக இடைவெளியை  காற்றில் பறக்கவிட்டு  திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கடைகள் அடைப்பு
இதையடுத்து காலை 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி  சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 
முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 இதேபோல வேளாங்கண்ணியில் டீ, மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

Next Story