தேனி மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்
தேனி மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகையின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகையின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
கொரோனா நிவாரணம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதுடன், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணத்தொகை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
மழையில் காத்திருந்தனர்
தேனி மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள 4 லட்சத்து 9 ஆயிரத்து 568 பயனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகளில் இந்த நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது. அதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை ரூ.2,000 வழங்கப்பட்டது.
இதற்காக கடந்த சில நாட்களாக வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும் தலா 200 பேர் வீதம் நேற்று நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். பல இடங்களில் சமூக இடைவெளியின்றி வரிசையில் நின்றனர்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்குமாறு போலீசார் அறிவுரை வழங்கினர். இதற்கிடையே மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று காலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடியும், நனைந்து கொண்டும் வரிசையில் காத்திருந்து நிவாரணத்தொகையை வாங்கி சென்றனர்.
எம்.எல்.ஏ.க்கள்
முன்னதாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா நிவாரணை உதவித்தொகை வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, முதல் தவணை நிவாரணத்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story