தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை


தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 15 May 2021 4:19 PM GMT (Updated: 15 May 2021 4:19 PM GMT)

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் போடி கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடி:
தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் போடி கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
கொட்டித்தீர்த்த கனமழை
அரபிக்கடலில் உருவான தக்தே புயல் காரணமாக தேனி உள்பட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் புயல், மழையை சமாளிக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருந்தனர். 
இந்தநிலையில் புயல் காரணமாக தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக போடி, மேகமலை வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மழையுடன் அவ்வப்போது சூறைக்காற்றும் வீசியது.
போடி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான முந்தல், பிச்சாங்கரை, சேரடிப்பாறை, மேலப்பரவு, ஊத்தாம்பாறை, வலசைத்துறை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையான போடிமெட்டு மலைப்பாதையில் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள், மலைப்பாதையில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கொட்டித்தீர்த்த கனமழையால் போடி கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த அணையில் தடுப்பை தாண்டி விழும் தண்ணீர், அப்படியே அருவி போல் கொட்டுகிறது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 
ஆனால் அணை பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக போடி, குரங்கணி, பிச்சாங்கரை, அல்லிநகரம், பெரியகுளம் பகுதிகளில் உள்ள மா மரங்கள் பலத்த சேதம் அடைந்தன. மரங்களில் காய்த்திருந்த மாங்காய்கள் கீழே விழுந்து நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் மேகமலை வனப்பகுதி மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக ஹைவேவிஸ் மலைப்பாதையில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள், மலைப்பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. 
தேனியில் பெய்த மழையால் மிராண்டா லைன் முதல் தெருவில் ஒரு மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரக்கிளையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் வெட்டி அகற்றினர். இதுதவிர ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 
மேலும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்ல வேண்டாம் என்று போலீசாரும், உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பணியாளர்களும் தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்தனர்.

Next Story