பலத்த காற்றுக்கு 80 வீடுகள் சேதம்


பலத்த காற்றுக்கு 80 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 15 May 2021 9:58 PM IST (Updated: 15 May 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுக்கு மேற்கூரைகள் பறந்ததால் வீடுகள் சேதம் அடைந்தன. மின்தடையால் மக்கள் இருளில் தவித்தனர்.

திண்டுக்கல்:

பலத்த காற்று 

தென்கிழக்கு அரபிக்கடலில் தவ்தே புயல் உருவானது. இதனால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், தேனி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட்அலார்ட் விடுக்கப்பட்டது.

 இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில் பேரிடர் மீட்புக்குழுவினர் உஷார் நிலையில் இருந்தனர்.

அனைத்து தாலுகாக்களிலும் மக்களுக்கு உதவ தாசில்தார்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், நேற்று முன்தினம் பகல் முழுவதும் பலத்த காற்று வீசியது. ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இரவிலும் பலத்த காற்று வீசத்தொடங்கியது.

அதோடு விடிய, விடிய காற்று வீசியதோடு, திண்டுக்கல் உள்பட ஒருசில இடங்களில் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மேலும் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

வீடுகள் சேதம் 

அதேநேரம் பலத்த காற்றுக்கு வீடுகளின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட தகர கொட்டகை, தென்னை ஓலைகளால் வேயப்பட்ட கூரைகள் பெயர்ந்து பறந்தன. அந்த வகையில் திண்டுக்கல் சவேரியார்பாளையம், சிறுமலை உள்பட மாவட்டம் முழுவதும் 80 வீடுகள் சேதம் அடைந்தன.

அதேநேரம் தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்தனர். மேலும் அச்சத்தில் பலர் விடிய, விடிய தூங்காமல் விழித்து இருந்தனர். இதனால் சேதமடைந்த வீடுகளில் வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மின்தடை 

மேலும் பலத்த காற்று வீசியதால் திண்டுக்கல் நகரில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் அவற்றை அகற்றி விட்டு மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் அதிகாலையில் மீண்டும் பலத்த காற்று வீசியதும் மின்தடை செய்யப்பட்டது. இதனால் அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காற்றுக்கு மின்கம்பியில் விழுந்த சிறு, சிறு மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது. இதனால் நேற்று பகலிலும் திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டது.

இதமான சூழல்

திண்டுக்கல் அருகே நந்த வனபட்டியில் ஒரு வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. நல்லவேளையாக அனைவரும் காயமின்றி தப்பினர். மேலும் திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையின் நடுவில் நிற்கும் மின்கம்பம் பலத்த காற்றுக்கு லேசாக சாய்ந்தது. 

அதை மின்ஊழியர்கள் நேற்று சரிசெய்தனர். அதேபோல் திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

திண்டுக்கல் என்றாலே அனல் பறக்கும் வெயிலும், தகதகக்கும் வெப்பமும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கடந்த 2 மாதமாக வெயில் கொளுத்தியது. இதற்கிடையே நேற்று முன்தினம் முழுவதும் காற்று வீசியது. அதோடு நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக இருந்து வெயிலை தடுத்தது. மேலும் சாரல் மழையும் பெய்தது. இதனால் கடந்த 2 நாட்களாக வெப்பம் விலகி இதமான சூழல் நிலவுகிறது.

 கொடைக்கானல்

இதேபோல் கொடைக்கானல் நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீசிய காற்று காரணமாக சேரன் நகர் பகுதியில் தனபாக்கியம் என்பவர் வீட்டின் மீது மரம் விழுந்ததி வீடு சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் இழப்பு ஏற்படவில்லை. கொடைக்கானல் மலைப்பாதை, ஏரிச்சாலை பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன.

இதேபோல் கிளாவரை மற்றும் மன்னவனூர் கிராமங்களில் வீசிய பலத்த காற்று காரணமாக தகரத்தினால் வேயப்பட்ட 4 வீடுகளின் மேற்கூரை பறந்தன. கவுஞ்சி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட கொய்மலர் தோட்டத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் சேதம் அடைந்துள்ளது. 

இந்தநிலையில் பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலில் முகாமிட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமலை

திண்டுக்கல் அருகே சிறுமலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழைக்கடை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. இதில் அண்ணாநகரை சேர்ந்த சுப்பன், சண்முகம், ராகுல், தன்ராஜ், சுப்பிரமணி தாழைக்கடையை சேர்ந்த வனராஜ் ஆகிய 6 பேரின் வீடுகளில் உள்ள மேற்கூரைகள் காற்றில் பறந்தது.

 சிறுமலை பழையூர், புதூர், அண்ணாநகர், தாழைக்கடை ஆகிய பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் ஆங்காங்கே வாழை, சவுக்கு, பலா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேருடன் சாய்ந்தன.மேலும் அண்ணா நகர் பகுதியில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டது.  

இதையடுத்து திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், மலரவன் கிராம நிர்வாக அதிகாரி வசந்த் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.  பின்னர் மலைப் பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினர். 

இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை, ஊராட்சி செயலர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.மேலும் சாலையில் விழுந்த மரங்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Next Story