திருவாரூர் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு
புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. முன்னதாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
திருவாரூர்:
புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. முன்னதாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
கடைகள் அடைப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கு வருகிற 24-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டும் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முதல் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்திட காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று திருவாரூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் காலை 10 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன. இதனால் திருவாரூர் கடைவீதி, நகை கடை சந்து, மார்க்கெட் சாலை, பனகல் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடின.
பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
முன்னதாக கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. மருத்துவம், அவசர வேலைகளுக்கு செல்பவர்களை தவிர மற்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அவசியம் என்பதால் தேவையற்ற வாகன போக்குவரத்து முடங்கியது. டீக்கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டது. அரசின் புதிய கட்டுபாடுகளால் மக்கள் வீடுகளில் சற்று முடங்கினர்.
மன்னார்குடி
மன்னார்குடி கடைத்தெருவில் நேற்று காலை பொதுமக்கள் பொருட்கள் வாங்க கூட்டம் கூட்டமாக சென்றனர். அதேேபால் உழவர் சந்தையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பொதுமக்கள் அலைமோதியதால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. மளிகை கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா தொற்றின் 2-ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் மக்கள் பொறுப்பற்று இதுபோல் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக கடைத்தெருக்களில் படையெடுப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலை தெரிவித்தனர். எனவே அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூறினர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து 10 மணிக்கு முன்பே கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. இதனால் கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் லெட்சுமாங்குடி நான்கு வழி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் கடைகள் மூடப்பட்டதால் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களும் மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.
நன்னிலம்
நன்னிலம் கடைத்தெருவில் காலை 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. டீக்கடைகளை திறக்க அனுமதி இல்லாததால் டீ குடிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோட்டூர்
கோட்டூர் அருகே ஒரத்தூர் பாலம் அருகில் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் தலையாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பண்டியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வேணுகோபால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story