வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி
ஆரோவில் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் தருமாபுரி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அய்யப்பன் (வயது 30). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் உள்ள லிப்ட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த கம்பெனியில் மேலாளராக திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை பகுதியை சேர்ந்த மகேஷ் (41) என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அய்யப்பன், தனது தாய் ராஜகுமாரியின் பெயரில் உள்ள 4 சென்ட் வீட்டு பத்திரத்தை மகேசிடம் கொடுத்து இந்த பத்திரத்தை வைத்து ஏதேனும் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் பெற்று தரும்படி கேட்டுள்ளார். இந்த பத்திரத்தை பெற்ற மகேஷ், அய்யப்பனுக்கு தெரியாமல் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அந்த பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.14 லட்சத்து 95 ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளார்.
மோசடி
இந்த சூழலில் அந்த வங்கியில் இருந்து பெற்ற அடமான கடன் ரூ.14 லட்சத்து 95 ஆயிரத்தை கட்டவில்லை என்று கடந்த சில மாதத்திற்கு முன்பு அய்யப்பன் வீட்டிற்கு ஜப்தி நோட்டீசு வந்தது. இதைப்பார்த்து அய்யப்பனும், அவரது தாய் ராஜகுமாரியும் அதிர்ச்சியடைந்தனர். வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியில் ரூ.14 லட்சத்து 95 ஆயிரத்தை கடனாக பெற்று மகேஷ் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மகேசின் வீட்டிற்கு சென்று அய்யப்பனும், அவரது தாய் ராஜகுமாரியும் நியாயம் கேட்டனர். அதற்கு மகேஷ், அவரது சகோதரர்களான கிரி, அருண் ஆகிய 3 பேரும் சேர்ந்து அய்யப்பன், ராஜகுமாரி ஆகிய இருவரையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
3 பேருக்கு வலைவீச்சு
இதுபற்றி ராஜகுமாரி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகேஷ், கிரி, அருண் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story