கொரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு


கொரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 May 2021 10:18 PM IST (Updated: 15 May 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

சிப்காட் அருகே உள்ள லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட்(ராணிப்பேட்டை)

சிப்காட் அருகே உள்ள லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கிராமப்புறத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தநிலையில் ராணிப்பேட்டை சிப்காட்டை அடுத்த லாலாபேட்டை பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய புது கட்டிடத்தை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற பணிகள் நடந்து வருகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை மருத்துவமனை அருகே உள்ள லாலாபேட்டை- பொன்னை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பொதுமக்கள், கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க உள்ள மருத்துவமனை கட்டிடம், குடியிருப்பு வளாகத்துக்கு மிக அருகில் உள்ளது. அக்கட்டிடத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கொரோனா சிகிச்சை மையத்தை, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, என்றனர். 

கலைந்து சென்றனர்

இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தும் பொதுமக்கள் சமரசம் அடைந்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story