சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை
அத்தியாவசிய பொருட்களை வாங்கச்செல்கிறோம் என்ற பெயரில் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் நேற்று முதல் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை உடனடியாக நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகர, கிராம முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், மாவட்ட எல்லைப்பகுதிகள் என பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டுப்பாடுகளை மீறியும், அத்தியாவசிய தேவையின்றியும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் நகரில் போலீசார் மேற்கொண்டு வரும் இப்பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு தேவையின்றி வெளியே வந்த வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறுப்புடன் செயல்பட
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் விதமாக தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளை இன்று (நேற்று) முதல் செயல்படுத்தி வருகிறோம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது. அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் செல்லாதவாறும் இருக்க காவல்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் குறித்து அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலமாகவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த சமூகத்தில் தாங்களும் ஒரு அங்கம் என்று பொதுமக்கள் ஒவ்வொருவரும் நினைத்து தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தங்களால் யாருக்கும் இந்நோய் தொற்று பரவக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். இனிவரும் நாட்களில் ஒருமுறை வெளியே வரும் மக்கள், ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
அத்தியாவசிய பொருட்களை வாங்கச்செல்கிறோம் என்ற பெயரில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முக கவசம் என்பது முக்கியம் என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். அனைவருமே முக கவசம் அணிந்துள்ளனர். இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story