முழுஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் குவிந்தனர்


முழுஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 May 2021 10:57 PM IST (Updated: 15 May 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் குவிந்து இருந்தனர்.

கடலூர், 


தமிழகத்தில் கொரோனா தொற்று உக்கிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் அரசு கடந்த 10-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது, இந்த தளர்வுகளும் கடுமையாக்கப்பட்டு, புதிய கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. 

அதாவது,  மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும், டீக்கடைகள்,

 நடைபாதையில் செயல்படும் பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்லவும் இ-பதிவு கட்டாயம் அவசியம் எனவும், அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உத்தரவிட்டது.


பொதுமக்கள் கூட்டம்

அதன்படி நேற்று முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க காலையிலேயே கடைகளிடல் மக்கள் குவிந்தனர். 

தனிமனித இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் அவர்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கினர். இதனால் சில இடங்களில் போலீசார், 9 மணிக்கே கடைகளை அடைக்க அறிவுறுத்தினர்.

மேலும்  கடலூர் நகரில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் இம்பீரியல் சாலை, பாரதி ரோடு, நேதாஜி ரோடு, திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

இதையடுத்து அந்த பகுதிகளில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், நீண்ட நேரம் போராடி நெரிசலை சரிசெய்தனர்.

ஏமாற்றம்

பின்னர் காலை 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டது. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்க்குகள், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் இயங்கின.  மதியம் 12 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டம் முற்றிலும் இன்றி வெறிச்சோடி கிடந்தன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தனிமனித இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் ஒன்று திரண்டு வருவது கொரோனா என்கிற சங்கிலி தொடர் மேலும் விரீயத்துடன் பரவும் அபாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  எனவே மக்கள்  இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story