ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி


ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 15 May 2021 11:15 PM IST (Updated: 15 May 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் முதல் தவணையாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

கோவை

கோவை மாவட்டத்தில் முதல் தவணையாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

கொரோனா நிவாரண நிதி

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இந்த கொரோனா நிவாரண நிதி ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் ரூ.4 ஆயிரம் வழங்குவதாக இருந்தது. 

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதில் இந்த மாதம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். 

மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து இருந்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இதைத்தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள 10 லட்சத்து 18 ஆயிரத்து 637 அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கடந்த 5 நாட்களாக கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. 

அந்த டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில் வந்து ரேஷன் கடைகளில் ரொக்கப்பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் கோவையில் உள்ள 1,401 ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையான ரூ.2 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது. முன்னதாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நிவாரண நிதியை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

குடைபிடித்தவாறு வந்தனர்

நேற்று காலையில் கோவையில் மழை பெய்துகொண்டு இருந்தது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் நிவாரண நிதி வாங்குவதற்கு குடைபிடித்தவாறு ரேஷன் கடைக்கு ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி சென்றனர். ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் 4 எண்ணம் வழங்கப்பட்டன.

கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நின்று இருந்தனர். அவர்கள் தீவிரமாக கண்காணித்து கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர்.

 நிவாரண தொகையை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றனர். அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு இந்த பணம் உதவியாக உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story