கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன


கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
x
தினத்தந்தி 15 May 2021 11:16 PM IST (Updated: 15 May 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் முழு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கோவை

கோவையில் முழு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கூடுதல் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவல் என்ற சங்கிலியை அறுப்பதற்காக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காததால் நாளுக்கு நாள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது.

எனவே முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வைப்பதற்காக முழு ஊரடங்கில் நேற்று முன்தினம் வரை மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டு இருந்த கடைகள் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

பொதுமக்களின் கூட்டம்

அதன்படி கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இற்காக நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்பட்டன. கோவையில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. 

கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் காய்கறி, மளிகை கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.இதனால் நேற்று காலை திறந்து இருந்த அனைத்து கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு இருந்தது. 

அவ்வப்போது கடைக்காரர்கள் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினர். மேலும் காலை 9.55 மணியளவில் போலீசார் ரோந்து சென்று கடைகளை மூடச்சொன்னார்கள். அதன்படி ஒவ்வொரு கடைக்காரர்களும் காலை 10 மணிக்கெல்லாம் கடைகளை மூடிவிட்டனர்.

போக்குவரத்து குறைந்தது

இதுதவிர காலை 10 மணிக்கு மேல் அத்தியாவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பிவைத்தனர். மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதன்காரணமாகவும், கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கோவையில் அனைத்து டீக்கடைகள், பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் நேற்று முன்தினத்தை காட்டிலும் நேற்று சாலைகளில் வாகன போக்குவரத்து சற்று குறைந்து காணப்பட்டது. 

நேற்று வெளியே சுற்றியவர்களை பெரும்பாலும் போலீசார் அபராதம் விதிக்காமல் எச்சரித்து அனுப்பியதுடன் கொரோனா குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வுகளை எடுத்து கூறினர்.


Next Story