கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்
கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கோவையில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
கோவை
கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கோவையில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொற்று 2-ம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா முதல் அலையில் இருந்ததைவிட அதன் பரவும் வேகம் 3 மடங்கு அதிகமாக உள்ளது. இதில் இருந்து மக்களை காப்பாற்றுவது என்பது மிகவும் அவசியமான பணியாகும்.
கட்டுப்படுத்த முடியும்
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒருவார காலத்தில் கொரோனா தொடர்பாக 4 முறை ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மருத்துவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு குழு நியமிக்கப்பட்டு கொரோனா பேரிடர் தொடர்பாக பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை தீவிரப்படுத்தினால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு மிக சிறப்பாக உள்ளது.
சிகிச்சை
அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்சிஜன் வசதி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்கள் கொரோனா சிகிச்சை பெறும் வகையில் கோவையில் 19 மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் படுக்கை வசதி குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வெளிப்படை தன்மையாக இருக்கும். அதில் கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று குறித்த தகவலை தெரிவிப்பதில் வெளிப்படையாக உள்ளது.
ஆக்சிஜன் வசதி படுக்கைகள்
கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். சித்த மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடிசியாவில் தற்போது 1,500 படுக்கை வசதிகள் உள்ளன. அங்கு 654 பேர் வரை அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தினமும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்துக்கு 7,000 ரெம்டெசிவிர் மருந்துகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால் 20 ஆயிரம் மருந்துகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் பேசி உள்ளோம்.
எனவே கூடுதலாக மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார். அவ்வாறு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும்போது சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுப்பாட்டு அறை
தமிழகத்தில் 2,000 டாக்டர்கள், 6,000 நர்சுகள், 2,000 தொழில்நுட்ப வல்லுனர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நியமிக்கப்படும்போது கோவைக்கு கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவில் ஆக்சிஜன் பயன்படுத்துவது கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை தான். இங்கு பின்பற்றப்படும் மருத்துவ முறைகளை பின்பற்றி பிற மருத்துவமனைகளளும் ஆக்சிஜன் பயன்பாட்டு அளவை குறைக்க வேண்டும்.
சென்னையில் செயல்பட்டு வருவதுபோல் வார் ரூம் என்ற கொரோனா கட்டுப்பாட்டு அறை கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் தொடங்கப்படும். கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story