பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. மேலும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. மேலும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
அரபிக்கடலில் புயல் சின்னம்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழையோடு சூறைக்காற்றும் வீசியது. இதனால் ஈத்தாமொழி, இரவிபுதூர், முளகுமூடு, சரல் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் பல கிராமங்கள் இரவு முழுவதும் இருளில் மூழ்கின.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையும் மழை பெய்தது. முதலில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதாவது செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கோர்ட்டு ரோடு, கணேசபுரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை அளவு
இதே போல மேற்கு மாவட்ட பகுதிகளிலும், அணைகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-71.2, பெருஞ்சாணி-81.8, சிற்றார் 1-78.4, சிற்றார் 2-68.4, களியல்-60.5, கன்னிமார்-33.8, மைலாடி-58.8, கொட்டாரம்-36, குழித்துறை-74, இரணியல்-22.4, குளச்சல்-64, குருந்தன்கோடு-46, நாகர்கோவில்-53.6, பூதப்பாண்டி-40.2, சுருளோடு-70.6, ஆரல்வாய்மொழி-20, திற்பரப்பு-64.8, புத்தன்அணை-79.6, தக்கலை-87, அடையாமடை-57, கோழிப்போர்விளை-92, குருந்தன்கோடு-46.8, முள்ளங்கினாவிளை-87, பாலமோர்-75.2, முக்கடல்-35 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 1,112 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று அதிகரித்து வினாடிக்கு 1,532 கனஅடி தண்ணீர் வந்தது. இரவு 10 மணிக்கு 3 ஆயிரத்து 202 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 42.13 அடியாக இருந்தது. அது நேற்று காலை 43.01 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணையில் இருந்து நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 3 ஆயிரத்து 27 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையை மாவட்ட கலெக்டர் அரவிந்த், சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒரே நாளில் 2 அடி உயர்வு
இதேபோல நேற்று முன்தினம் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 55.75 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து 1,510 கன அடியாக அதிகரித்ததால் நேற்று காலை அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து 57.80 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 8.53 அடி ஆக இருந்தது. அது நேற்று 9.97அடி ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் 1.44 அடி உயர்ந்து இருக்கிறது. அணைக்கு 383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.62அடி ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 1.45 அடி உயர்ந்து 10.07 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 594 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 40 கனஅடி தண்ணீர் வருகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, எஸ்.டி.மங்காடு, கணபதியான்கடவு பகுதியில் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறையில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. வெள்ளபெருக்கு காரணமாக காரையோர பகுதிகளில் உள்ள வயல் வெளிகள், தென்னந் தோப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
வள்ளியாறு, பரளியாறு, பழையாற்று கால்வாய் ஆகியவற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பழையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக வடக்கு தாமரைகுளம் பகுதியில் உள்ள வயல்வெளிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. புத்தேரி நெடுங்குளம் நிரம்பி வருவதையடுத்து விவசாயிகள் குளத்தின் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.
புத்தேரி குளம் நிரம்பி வருவதால் புளியடி ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குளங்கள் நிரம்பி வருவதால் குளங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் மழை காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடு பாதி அளவு சேதம் அடைந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் மரம் விழுந்து ஒரு வீடு சேதம் அடைந்துள்ளது.
Related Tags :
Next Story