நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் உள்பட 11 பேர் சாவு


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் உள்பட 11 பேர் சாவு
x
தினத்தந்தி 16 May 2021 12:01 AM IST (Updated: 16 May 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் உள்பட 11 பேர் இறந்தனர்.

நாமக்கல்:
11 பேர் சாவு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 300 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 144 பேர் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு தேவையான ஆக்சிஜனை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தினமும் பெற்று, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர்பலி ஏற்படாமல் தடுத்து வருகின்றனர். இதற்கிடையே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சேலம், திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இருப்பினும் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 2 கொரோனா நோயாளிகள், கொரோனா நெகட்டிவ் வந்தவர்கள் மற்றும் இதர நோயாளிகள் என மொத்தம் 11 பேர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ கல்லூரி டீன் விளக்கம்
இது குறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமதமாக சிகிச்சைக்கு வருவது, கொரோனா நெகட்டிவ் என்று வந்தவுடன் கண்காணிப்பு இல்லாமல் இருத்தல், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று முடியாத சூழ்நிலையில் இங்கு வருவது, வெளி மாவட்டங்களில் இருந்து நோயாளிகளின் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இறப்பு அதிகரித்து உள்ளது.
இது தவிர கொரோனாவின் முதலாவது அலையை காட்டிலும், 2-வது அலை மிகவும் மோசமாக உள்ளது. உயிர் இழந்த நபர்களில் பெரும்பாலானவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். இதனால் 25 வயது இளைஞர்கள் கூட உயிரிழக்கும் சம்பவம் நடந்துள்ளது. இனிவரும் காலங்களில் உயிர்ப்பலியை குறைக்க வேண்டும் என்றால், அறிகுறி தென்பட்ட உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும். 
தடுப்பூசி
அதேபோல் நெகட்டிவ் வந்தவர்களும் ஒரு வார காலத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். நுரையீரல் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. குறிப்பிட்ட வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்கவும், நோயில் இருந்து எளிதில் விடுபடவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story