கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க திட்டமா?


கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க திட்டமா?
x
தினத்தந்தி 15 May 2021 7:03 PM GMT (Updated: 15 May 2021 7:03 PM GMT)

கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க திட்டமா? என்பது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க திட்டமா? என்பது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

உணவு பொட்டலங்கள்

பெங்களூருவில் முன்கள பணியாளர்கள், ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும் பணியின் தொடக்க நிகழ்ச்சி பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே நடைபெற்றது. 

இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, உணவு பொட்டலங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஊரடங்கு நேரத்தில் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற நோக்கத்தில் இஸ்கான் கோவில் நிர்வாகம், உணவு பொட்டலங்களை தயாரித்து வழங்குகிறது.

கடந்த முறையும் இத்தகைய உணவுகளை அந்த நிர்வாகம் வழங்கியது. அந்த கோவில் நிர்வாகம் அரசுடன் கைகோர்த்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்பட உணவு தேவை உள்ளோருக்கு மதிய உணவு வினியோகம் செய்யப்படுகிறது.

பரிசோதனைகளின் எண்ணிக்கை

தினமும் 1,000 போலீசாருக்கு இதன் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா, நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

அப்போது கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முதல்-மந்திரி முடிவு எடுப்பார்.
கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. இதற்கு முன்பு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் கொரோனா பரிசோதனைக்கான சளி, மாதிரி சேகரிக்கப்பட்டது.

இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அங்கு பரிசோதனை மேற்கொள்வதை நிறுத்தியுள்ளோம். அதனால் பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்கிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story