கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது.
பெரம்பலூர்:
கொரோனா நிவாரண நிதி
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றும், அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதத்திலேயே வழங்கப்படும் என்று உத்தரவிட்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களான மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியின் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.36 கோடியே 55 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த பணி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் எந்த தேதியில், எந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் நிவாரண நிதி பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டது.
கடை திறக்கும் முன்பே காத்திருந்தனர்
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 282 ரேஷன் கடைகள் மூலம் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் பணி 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் ரேஷன் கடை திறப்பதற்கு முன்னதாகவே ரேஷன் அட்டைதாரர்கள் முககவசம் அணிந்தும், கையில் டோக்கனுடன் வந்து காத்திருந்ததை காணமுடிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரேஷன் அட்டைதாரர்களை சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.
மதியம் 12 மணி வரை நிவாரண நிதி வழங்கப்பட்டது. சில ரேஷன் கடையில் சமூக இடைவெளியை ரேஷன் அட்டைதாரர்கள் பின்பற்றவில்லை. நேற்று ஒவ்வொரு ரேஷன் கடை மூலம் 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.
Related Tags :
Next Story