கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக டாக்டர், செவிலியர் பணிக்கான நேர்காணல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக டாக்டர், செவிலியர் பணிக்கான நேர்காணலுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
திருச்சி,
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக டாக்டர், செவிலியர் பணிக்கான நேர்காணலுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
அதிகரிக்கும் நோயாளிகள்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக அளவிலான நோயாளிகள் மருத்துவமனை மற்றும் ‘கோவிட் கேர்' மையங்களுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, கூடுதல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களின் அத்தியாவசிய தேவைப்பணியினை கருத்தில் கொண்டு, தகுதிபெற்ற மருத்துவ அலுவலர்கள் மற்றும் தகுதி வாய்ந்த செவிலியர்கள் 3 மாத காலத்திற்கு தேவைக்கேற்ப தற்காலிகமாக கொரோனா சிகிச்சை வழங்க ஏதுவாக மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நேர்காணல்
தற்காலிக டாக்டர் மற்றும் செவிலியர் பணிக்கான நேர்காணல் (Walk-In-Interview) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லெட்சுமி மற்றும் மேலும் 4 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் நேர்காணலை நடத்தினர்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை டாக்டர்களுக்கான நேர்காணல் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் செவிலியர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் கூறியதாவது:-
திருச்சிக்கு முன்னுரிமை
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். கொரோனா காலப்பணிக்கு 38 டாக்டர்கள் வரை பணியில் அமர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது. மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். செவிலியர் பணிக்கு மாதம் ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story