காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு சேலம் செவ்வாய்பேட்டையில் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம்
காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டதால், சேலம் செவ்வாய்பேட்டையில் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதனால் காலை 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும், அதற்கு மேல் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 6 மணிக்கு மளிகை கடைகள் திறக்கப்பட்டன. சேலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் மளிகை கடைகள் முன்பு சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் செவ்வாய்பேட்டை, லீபஜார் மற்றும் பால் மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 10 மணி வரையிலும் மளிகை கடைகளில் வியாபாரம் களைகட்டியது. அதன்பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதேபோல் பெரமனூர், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிபாளையம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, நெத்திமேடு, குகை உள்பட பல்வேறு இடங்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வியாபாரம் நடைபெற்றது.
Related Tags :
Next Story