சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் 25-ந் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் வருகிற 25-ந் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சேலம்:
சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் வருகிற 25-ந் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வந்தனர். பின்னர் அமைச்சர்கள் அங்கிருந்த கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரி டீன் முருகேசன் மற்றும் அதிகாரிகளிடம் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், போதுமான அளவுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளதா? என்பன உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர்கள் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வரும் சித்தா கொரோனா சிகிச்சை மையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஆக்சிஜன் வசதி
அதைத்தொடர்ந்து அவர்கள் சேலம் உருக்காலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது;-
சேலம் அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை 1,081 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றது. இதில் தற்போது 776 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரியில் உள்ள 1,081 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
சித்தா சிகிச்சை மையம்
அரசு ஆஸ்பத்திரியில் இடநெருக்கடி காரணமாக அங்கு செயல்பட்டு கொண்டிருக்கிற தடுப்பூசி மையம் மற்றும் கொரோனா பரிசோதனை மையம் ஆகியவற்றை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிறந்த கொரோனா சிகிச்சை மையமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசு மகளிர் கல்லூரியில் தற்போது செயல்படும் சித்தா சிகிச்சை மையத்தில் 100 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் கூடுதலாக 100 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்..
உருக்காலை
சேலம் உருக்காலை வளாகத்தில் சேலம் உருக்காலை, ஜே.எஸ்.டபிள்யு. உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து வருகிற 25-ந் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற அச்ச நிலை ஏற்பட்டிருந்தாலும் சேலம் மாவட்டத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் விரைவில் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
உற்பத்தி பாதிப்பு
தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நம்முடைய தேவை 470 டன் ஆகும். இதனால் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜனை பெற்று வருகிறோம். பிரதான குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இங்கு தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் தட்டுப்பாடு என்கிற நிலை ஏற்பட்டிருக்காது.
தனியார் ஆஸ்பத்திரிகள், ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகளை வெளியில் அனுப்புவதை தவிர்த்து, முடிந்தால் உங்களுடைய வளாகத்தில் ஒரு ஆக்சிஜன் பிளாண்டை அமைத்து மருத்துவ சேவையை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கலெக்டர் ராமன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்த போது, டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அங்கு வந்த அமுதா என்ற பெண் திடீரென அமைச்சர் மா.சுப்பிரமணியனின் காலில் விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story