நெல்லையில் திருமணம், இறப்பு வீட்டுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்


நெல்லையில் திருமணம், இறப்பு வீட்டுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்
x
தினத்தந்தி 16 May 2021 1:47 AM IST (Updated: 16 May 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் திருமணம், இறப்பு வீட்டுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட அரசால் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மளிகைப்பொருட்கள், பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஏ.டி.எம்., பெட்ரோல் பங்க்குகள், மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படலாம். காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், டீக்கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள், பலசரக்குகள், காய்கறிகளை வாங்குவதற்கு அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும். அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோருக்கான உதவி போன்றவற்றுக்கு மாவட்டத்துக்குள்ளேயும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

ஏற்கனவே அரசு அறிவித்திருந்தபடி இன்றும், வருகிற 23-ந்தேதியும் தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Next Story