கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: சேலத்தில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சேலம் மாநகரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம்:
கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சேலம் மாநகரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் தினமும் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே நேற்று முதல் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் சேலம் மாநகரில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக்கிய சாலைகளை தடுப்புகள் வைத்து அடைத்தனர். எனினும் தேவையின்றி சென்றவர்களை போலீசார் எச்சரிக்கை மட்டுமே செய்தனர்.
இதனால் காலை 10 மணிக்கு மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் அதன்பிறகு பொதுமக்கள் சாலைகளில் தங்களது வாகனங்களில் கொரோனா வீரியத்தை பொருட்படுத்தாமல் உலா வந்ததை காண முடிந்தது. குறிப்பாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள் அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றனர்.
தீவிரப்படுத்த வேண்டும்
போலீசார் கலெக்டர் அலுவலக பகுதியில் மட்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போதும், 4 ரோடு, பஸ் நிலையம், ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி உள்பட நகரின் முக்கிய இடங்களில் எந்தவித கண்காணிப்பிலும் ஈடுபடாததால், வாகன ஓட்டிகள் சர்வசாதாரணமாக சுற்றித்திரிந்ததை காணமுடிந்தது. இதை பார்க்கும் போது இது ஊரடங்கு உத்தரவு மாதிரி தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். எனவே அரசு உத்தரவின்படி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் அதை மீறி சாலையில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. வாகனத்தை பறிமுதல் செய்தால், அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே நோயின் தாக்கத்தை புரிந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
Related Tags :
Next Story