தஞ்சையில், பூக்கடைகள் அடைப்பு


தஞ்சையில், பூக்கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 16 May 2021 1:57 AM IST (Updated: 16 May 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், பூ மார்க்கெட்-பூக்கடைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்;
தஞ்சையில், பூ மார்க்கெட்-பூக்கடைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூ மார்க்கெட் 
தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது தினமும் 1000 டன் பூக்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும்.
இங்கிருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் பூக்களை விலைக்கு வாங்கி வந்து தள்ளுவண்டிகள் மூலமாகவும் தொழிலாளர்கள் விற்பனை செய்து வந்தனர்.
வியாபாரிகள் வேதனை 
இந்தநிலையில் பூக்கடைகளை திறக்க அனுமதி அளிக்காததால் தஞ்சை ரெயிலடி, பூக்காரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூக்கடைகள் திறக்கப்படவில்லை. தஞ்சை பூக்கார தெருவில் உள்ள பூ மார்க்கெட்டையும் திறக்கக்கூடாது என போலீசாரும், அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி நேற்று பூ மார்க்கெட் திறக்கப்படவில்லை. மாற்று இடமும் ஒதுக்கப்படாததால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து பூ மொத்த வியாபாரிகள் கூறும்போது, திருச்சியில் மார்க்கெட் அடைக்கப்பட்டாலும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சையில் மார்க்கெட்டை திறக்கக்கூடாது என கூறிய அதிகாரிகள் மாற்று இடம் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஒரு நாளைக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்துள்ளனர். இவைகளுக்கு மாலை, பூக்கள் தேவைப்படும்.
மாற்று இடம் 
ஆனால் பூ மார்க்கெட், பூக்கள் திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். துக்கநிகழ்ச்சிகளுக்கும் மாலை தேவைப்படும். நாங்கள் மட்டுமல்ல விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர். எனவே கடந்த ஆண்டைபோல் தனியாக இடஒதுக்கீடு செய்து பூ வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story