கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமலுக்கு வந்தது


கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 16 May 2021 2:04 AM IST (Updated: 16 May 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் நேற்று அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாட்டுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

விருதுநகர், 
மாவட்டம் முழுவதும் நேற்று அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாட்டுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. 
முழு ஊரடங்கு 
தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கொரோனா நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. 
ஏற்கனவே அறிவித்தபடி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் செயல்படும் என கூறப்பட்டிருந்தது. மற்ற கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் நோய் பாதிப்பு எண்ணிக்கை குறையாத நிலையில் தமிழக அரசு அதற்கான கூடுதல் கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் அறிவித்தது.
காய்கறி, பலசரக்கு மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது.
தளர்வு நேரம் 
மேலும் டீக்கடைகளுக்கான அனுமதி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. பிற கடைகளுக்கு வழக்கம் போல் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்டங்களுக்கும் மாவட்டத்திற்குள்ளும் செல்வதற்கு இ-பதிவு முறை வருகிற 17-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் காலையில் தளர்வு நேரம் குறைக்கப்பட்டதால் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. விருதுநகரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் செயல்படும் நிலையில் பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் வரை கூட்டம் குறைவாக இருந்த நிலையில் நேற்று மக்கள் அதிக எண்ணிக்கையில் காய்கறி வாங்க வரும்நிலை இருந்தது.
 இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டது.
வாகன சோதனை 
போலீசார் நேற்று முக்கிய சந்திப்புகளில் நின்று தேவையற்ற முறையில் இருசக்கர வாகனங்களில வருவோரை நிறுத்தி விசாரணை செய்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் நிலை இருந்தது.
 மேலும் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் தேவையற்ற முறையில் சுற்றிதிரிந்தவர்களிடம்அபராதம் வசூலிக்கப்பட்டது. மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள், நாட்டு மருந்து கடைகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன. ஆட்டோக்கள் இயங்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோரிக்கை 
மேலும் நேற்று ரேஷன்கடைகளில் கொரோனாநிவாரண நிதி ரூ.2000 வழங்கும்பணி தொடங்கியது.
எனினும் பொதுமக்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை பொருட்கள் வாங்க அனுமதித்துள்ள நிலையில் இதனை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பொருட்கள் வாங்க அனுமதித்தால் அவசரமின்றி பொருட்களை வாங்க வாய்ப்பு ஏற்படும் என கருத்து தெரிவித்தனர். எனவே தமிழக அரசு இதனை பரீசிலித்து தளர்வு நேரத்தை மாற்றம் செய்ய வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story