புதுவையில் அசாதாரண நிலை நிலவுகிறது; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை
புதுவையில் அசாதாரண நிலை நிலவுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிப்பு மோசம்
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. புதிய ஆட்சி வந்த பின்னர் நிர்வாகத்தில் பல துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லை.
தற்போது ஏற்படும் உயிரிழப்புகள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த 15 நாட்களாக நாளொன்றுக்கு 20-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர். இந்த உயிர் இழப்புகளை நாம் தவிர்த்திருக்கலாம். அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.
யார் பொறுப்புமாநில அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அதை கட்டுக்குள் வைத்திருந்தோம். இப்போது யாரும் களப்பணிக்கு செல்வது இல்லை. மருத்துவமனைகளில் ஆய்வும் நடத்துவது இல்லை. ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி தான் கவலை. மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
தற்போது ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? கவர்னரா? புதிய ஆட்சியாளர்களா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை யார் கண்காணிப்பது?
காரைக்கால் மாவட்டத்தில் போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை. இதற்கான விளக்கத்தை மக்களுக்கு அரசு அளிக்க வேண்டும். மக்கள் பெரும்பாலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
கூடுதல் படுக்கைவசதிஜிப்மர் மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை நமது தேவைக்குப் போக மீதி உள்ளதை மட்டுமே வெளி மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும். கூட்டம் போடுவதாலும், அறிக்கை விடுவதாலும் மக்களை காப்பாற்ற முடியாது. முதலில் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தடுப்பூசி போடுவதும் தற்போது குறைந்து உள்ளது. ஊரடங்கு உத்தரவை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
அசாதாரண நிலைமாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு சரியில்லை. மக்களின் குறைகளை கேட்கவும் மாவட்ட நிர்வாகம் தயாரில்லை. இதனால் மாநிலத்தில் தற்போது அசாதாரண நிலை உருவாகி உள்ளது.
எங்கள் ஆட்சியில் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களில் 98 சதவீதம் பேர் குணமடைந்தனர். ஆனால் அது இப்போது 75 சதவீதமாக குறைந்துவிட்டது.
உயிரிழப்பில் இந்தியாவிலேயே 2-வது இடத்துக்கு புதுச்சேரி வந்துள்ளது. தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நிர்வாக திறமையின்மையையே இது காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.