அதிதீவிர புயலாக வலுப்பெற்றது ‘டவ்தே' புயல்: புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


அதிதீவிர புயலாக வலுப்பெற்றது ‘டவ்தே புயல்: புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 5:44 PM IST (Updated: 16 May 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் உருவான 'டவ்தே' புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘டவ்தே’ புயல்
அரபிக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலை புயலாக உருவானது. ‘டவ்தே’ என்ற இந்த புயல் நேற்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிதீவிர புயலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை கொட்டி வருகிறது. அதிலும் குமரி பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி, தேனியில் கனமழை
அதன்படி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), 19-ந்தேதியும் நீலகிரி, தேனி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

புயல் காரணமாக, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 90 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Next Story