நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு


நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 16 May 2021 8:43 PM IST (Updated: 16 May 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

ஊட்டி,

நீலகிரியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

கடைகள் மூடல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 8, 9-ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. 

தொடர்ந்து அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்து செயல்பட்டது. பின்னர் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு காலை 10 மணி மட்டும் அனுமதிக்கப்பட்ட கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனால் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

 திறந்தவெளியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, மார்க்கெட் காய்கறி கடைகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டில் அனைத்து நுழைவுவாயில்களும் அடைக்கப்பட்டது. 

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வந்ததால் கூட்டம் அலைமோதியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடிய சாலைகள்

ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, எட்டின்ஸ் சாலை, மணிக்கூண்டு, லோயர் பஜார், மத்திய பஸ் நிலையம் பகுதி, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. 

மருந்தகங்கள், பால் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்து இருந்தன. பொதுமக்கள் மருந்து, மாத்திரைகள், பால் போன்றவற்றை வாங்க மட்டும் வெளியே வந்தனர்.

ஊட்டியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் போலீசார் குடைகளை பிடித்துக்கொண்டு முழு ஊரடங்கை மீறி யாரேனும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுகிறார்களா என்று கண்காணித்தனர். 

முழு ஊரடங்கையொட்டி நீலகிரி முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கு மற்றும் தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.


Next Story