நீலகிரியில் ‘ஸ்கூபா டைவிங்' மீட்புக்குழுவினர் தயார்
நீலகிரியில் ‘ஸ்கூபா டைவிங்' மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஊட்டி,
டவ்தே புயல் ஏற்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி முழுவதும் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஆண்டை போல் பொதுமக்களுக்கு உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படாத வகையில் தமிழக தீயணைப்பு துறை இயக்குனர் சி.சைலேந்திரபாபு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி தீயணைப்பு துறை துணை இயக்குனர் சத்யநாராயணன் தலைமையில் நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி, உதவி மாவட்ட அலுவலர்கள் பாலகிருஷ்ணன் உள்பட 4 பேர், தீயணைப்பு வீரர்கள் 100 பேர் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய தீயணைப்பு நிலையங்களிலும், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் வாகனங்களில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
தீயணைப்பு துறை டி.ஜி.பி. நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மெரினா கடற்கரை சிறப்பு மீட்புக்குழு உயிர் மீட்பு அழைப்புகள், ஆழ்கடல் நீந்துதல் போன்ற பயிற்சிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவிங் மீட்பு குழுவினர் 15 பேர் சென்னையில் இருந்து நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இயற்கை இடர்பாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன கருவிகள், சிறப்பு தளவாடங்களுடன் வெள்ள மீட்பு பணிகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
Related Tags :
Next Story