தேனியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பஸ் நிலைய கடைக்காரர்கள்
தேனியில் ஊரடங்கால் பஸ் நிலைய கடைக்காரர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
தேனி:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த 10-ந்தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டு உள்ளன. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, சின்னமனூர், போடி, உத்தமபாளையம், கம்பம், தேவாரம், கடமலைக்குண்டு, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் சுமார் 1,000 கடைகள் உள்ளன.
டீக்கடை, பழக்கடை, உணவகம், குளிர்பான கடைகள், செல்போன் கடைகள் உள்ளிட்ட கடைகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை சார்ந்து அமைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கப்பட்டால் தான் இந்த கடைகளை திறக்க முடியும். முழு ஊரடங்கு எதிரொலியாக பஸ்கள் இயக்கப்படாததால் கடைகள் மூடியே உள்ளன. அத்துடன் கடந்த மாதத்தில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரவு நேரங்களிலும் கடைகள் மூடப்பட்டன.
இந்த ஊரடங்கு காரணமாக பஸ் நிலையங்களில் வாடகைக்கு கடைகள் நடத்தும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடைகளில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையின்றி, வருமானமின்றி வறுமையில் தவிக்கின்றனர்.
இதனால் பஸ் நிலைய கடைக்காரர்கள், தங்களின் கடைகளுக்கான வாடகையை நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடைகளுக்கு இந்த ஊரடங்கு கால கட்டத்துக்கான வாடகையை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story