வீரபாண்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து நாசம்
வீரபாண்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நாசமானது.
உப்புக்கோட்டை:
கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியான வீரபாண்டி, உப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவை விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வீரபாண்டி பகுதியில் சுமார் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நாசமானது. இதனால் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கம்பம் பள்ளத்தாக்கு தொடக்க பகுதியில் இருந்து கடைமடை பகுதி வரை தற்போது நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. இதற்கிடையே தற்போது மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன.
சில இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அதில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்வதில் சிக்கல் இருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story