குமரியில் ஒரே நாளில் 28 பேர் பலி
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 1,101 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 1,101 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் வேக வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு கட்டுக்குள் வந்தபடி இல்லை.
தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியே உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பாதிப்பு தினம் தினம் அதிகரிப்பதால் அதிகாரிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
28 பேர் பலி
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க பலி எண்ணிக்கை மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியானதே அதிகபட்ச பலி எண்ணிக்கையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 28 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கியுள்ளது. இது குமரி மாவட்டத்தில் கொரோனா பலியில் புதிய உச்சம் ஆகும்.
பிணவறையில் இடம் இல்லை
தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிணங்களை வைக்க இடம் இல்லை என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story