ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேலும் ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் ஏராளமான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன.
நெல், கரும்பு, வாழை, தென்னை உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன் படி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் லீலாவதி, மாணிக்கவேல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் பாசனத்துக்காக வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்படி முதல்போகத்துக்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி முடிய 153 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நீர்இருப்பை பொருத்து அணையில் இருந்து 153 நாட்களுக்கு மொத்தம் 1,205 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story