கிணத்துக்கடவு அருகே ஊரடங்கு விதியை மீறி செயல்பட்ட கடைக்கு சீல்


கிணத்துக்கடவு அருகே ஊரடங்கு விதியை மீறி செயல்பட்ட கடைக்கு சீல்
x
தினத்தந்தி 16 May 2021 11:41 PM IST (Updated: 17 May 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே ஊரடங்கு விதியை மீறி செயல்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கிணத்துக்கடவு,

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அத்துடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி இல்லை.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஊரடங்கு விதிகளை மீறி யாராவது கடைகளை திறந்து உள்ளார்களா என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அதிகாரி முத்து தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், ராமலட்சுமி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் வடசித்தூர் பகுதியில் ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கு ஒரு பல்பொருள் அங்காடி விதிமுறைகளை மீறி  திறந்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த கடையை மூடி சீல் வைத்தனர். 

மேலும் இந்த குழுவினர் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து ரூ.6 ஆயிரத்து 300-ஐ வசூலித்தனர்.

Next Story