கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 200 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன


கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 200 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
x
தினத்தந்தி 16 May 2021 11:42 PM IST (Updated: 17 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 200 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் டிராக்டர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3000-க்கும் மேல் செல்கிறது. 

எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக மீண்டும் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகளில் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

ஊரக பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஒரு தெருவில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்படும். அதன்படி கோவை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. 

தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புட னும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றார்.

கோவை மத்திய மண்டலம் சி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். 

அப்போது அவர், பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். 

பின்னர் அவர், மேற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். அவர், அங்கிருந்து கொரோனா நோயாளியுடன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து மற்றும் விவரங்களை கேட்டறிந்தார். 

அவர்களிடம் முககவசம் அணிய வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் களில் 65 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர். எனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 5 மண்டலங்களிலும் 15 டிராக்டர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

Next Story