அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு
கொரோனா நோயாளிகளை தாமதமின்றி சேர்க்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்தார்.
கோவை
கொரோனா நோயாளிகளை தாமதமின்றி சேர்க்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்தார்.
நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. இதனால் தினமும் 15 முதல் 20 பேர் கொரோனா வுக்கு பலியாகிறார்கள். தொற்று பாதித்த பலர் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி மிகவும் அவசியமாக உள்ளது.
இதன் காரணமாக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதன் காரணமாக ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
ஆம்புலன்சில் காத்திருப்பு
இது தவிர ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு இறுதி கட்டத்தில் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆம்புலன்சில் காத்தி ருந்த 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் வசதிக்காக ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்கவும், நோயாளிகளின் உயிரை காக்கும் வகையிலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.
சிறப்பு வார்டு தொடக்கம்
இதைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி ஆக்சிஜன் கிடைக்க வசதியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஐ.எல்.ஐ. வார்டு அருகே 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு (ஜீரோ டிலே) தொடங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
கொரோனா தொற்றுடன் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள், தனியார் மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படுபவர்கள் உடனடியாக ஜீரோ டிலே வார்டில் அனுமதிக்கப்படுவார்கள்.
அங்கு நோயாளிகளை பரிசோதித்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், சாதாரண படுக்கை தேவை உள்ள நோயாளிகள் பிரிக்கப்படுவர். இதனால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
உயிரிழப்பு தடுக்கப்படும்
அதிலும் குறிப்பாக ஆக்சிஜனுக்காக நோயாளிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்படாது. ஜீரோ டிலே வார்டில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் என்ற கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
அந்த கருவி, வெளிக்காற்றை உள்வாங்கி நைட்ரஜனை பிரித்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும். இதன் மூலம் கொரோனா நோயாளிகள் படுக்கைக்காக பல மணி நேரம் காத்திருந்து ஆம்புலன்சிலேயே உயிரிழப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story