மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை
கோலார் அருகே மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் தங்கை பங்கு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது
கோலார்:
கோலார் அருகே மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் தங்கை பங்கு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
மாற்று திறனாளி
பொதுவாக திருமணம் ஆன பெண்கள் தங்களது கணவரை யாரும் பங்கு போட்டு கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு, ஒரு தங்கை தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவரது தங்கை லலிதா.
மாற்று திறனாளி என்பதால் சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது.
ஒரே மேடையில் திருமணம்
இந்த நிலையில் மாற்று திறனாளி என்பதால் எனது அக்காவை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும், இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் உமாபதியிடம், லலிதா கூறியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு உமாபதி மறுத்தார்.
ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா கூறியதாக தெரிகிறது.
பின்னர் இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றனர். மேலும் மாற்று திறனாளி அக்காளுக்கு தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story