ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை- ரூ.90 ஆயிரம் கொள்ளை ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது
மெலட்டூர் அருகே, ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெலட்டூர்:-
மெலட்டூர் அருகே, ராணுவ வீரர் வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணுவ வீரர்கள்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரன். இவருடைய மகன்கள் கபாலீஸ்வரன் (வயது35), பிரகதீஸ்வரன் (32). இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
கபாலீஸ்வரன், பிரகதீஷ்வரன் ஆகிய 2 பேரும் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். விடுமுறை காரணமாக தற்போது ஊர் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று குண்டூரில் உள்ள தங்களுடைய வீட்டில் மின்சாரம் இல்லாததால், பக்கத்து தெருவில் உள்ள தங்களுடைய மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் இரவு தங்கினர்.
தனிப்படை அமைப்பு
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.
5 பேர் கைது
தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 5 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராஜபாண்டி மகன்கள் ராஜ் (24), சக்திவேல் (28), சிவா (27), கணேசன் மகன்கள் முருகன் (45), மாரியப்பன் (46) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே குண்டூரில் உள்ள ராணுவ வீரர்கள் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை தஞ்சை மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story